குறைந்த விலையில் வெங்காயம், தக்காளி விற்பனை
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி, வெங்காயத்தின் விலையில் ஏற்றம் கண்டுள்ள நிலையில், சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக 100 ரூபாய்க்கும், வெங்காயம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை வரும் காலங்களில் மேலும் உயரலாம் என்று கூறப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்ய அரசு முடிவெடுத்தது.
அதன்படி, மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி, வெங்காயம் ஆகியவை அரசின் பண்ணை, பசுமை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும், வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலை குறையும் வரை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளிலும் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.