City Updates

எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் சுபிக்ஷா சுகாதார அட்டை அறிமுகம்

சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், 2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய நலத்திட்டமாக “சுபிக்ஷா சுகாதார அட்டை – அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற திட்டத்தை, அதன் நிறுவனர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக சுமார் 1 லட்சம் மக்கள் நேரடியாகப் பயனடைய உள்ளனர். மக்கள் எந்த சமூகப் பின்னணியோ, வருமான நிலமையோ உடையவர்களாக இருந்தாலும், அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

டாக்டர் பி. சத்தியநாராயணன், சார்பு அதிபர் கூறுகையில்: “மருத்துவ சேவை என்பது நோய்களை குணப்படுத்துவதில் மட்டுமல்ல. அறிவியல் உயிர்களை காப்பாற்றுகிறது, ஆனால் அந்த உயிர்களுக்கு அர்த்தத்தையும் மதிப்பையும் வழங்குவது கருணையே. ‘சுபிக்ஷா’ சுகாதார அட்டை, சிகிச்சையுடன் மனிதநேயத்தையும் இணைத்துச் செல்கிறது,” என்றார்.

“400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 1,600-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 30-க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவுகள், தினசரி 3,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சேவை வழங்கி வரும் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையே எங்கள் வலிமை. அதில் ‘சுபிக்ஷா’ சுகாதார அட்டை இணைவதால், சமத்துவ அடிப்படையிலான மருத்துவ சேவைகள் அனைவருக்கும் சென்றடையும்” என டாக்டர் நிதின் எம். நாகர்கர், சார்பு துணைவேந்தர் தெரிவித்தார்.

டாக்டர் டி. மைதிலி, கூடுதல் பதிவாளர் (MSL), கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நலன்களை வலியுறுத்தினார்: “ஒவ்வொரு தாயும் மரியாதையும் பராமரிப்பும் பெற வேண்டும். அதற்காக, முழுமையாக இலவச கர்ப்ப பராமரிப்பு, மேலும் (Tmt. Valliammai Women and Child Welfare Scheme) தாய் வீட்டுச் சீதனமாக ரூ.20,000 வழங்கப்படுகிறது. இது பெண்களுக்கு ஆதரவாக அமையும்.”

டாக்டர் ஆர். வெங்கட்ராமன், மருத்துவ கண்காணிப்பாளர், திட்டத்தின் பரந்த பார்வையைப் பகிர்ந்தார்: “24 மணி நேர அவசர சிகிச்சை முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை, இலவச கிராமப்புற சுகாதார முகாம்கள் முதல் முழுமையான தாய் பராமரிப்பு வரை அனைத்தையும் உள்ளடக்கியது இந்த அட்டை, 1 லட்சம் பேரைச் சென்றடையும். இந்தத் திட்டம் வெறும் துவக்கம் மட்டுமே.”

“அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற கோஷத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முயற்சி, சமூக சமத்துவத்தையும் சுகாதார உரிமையையும் முன்னிறுத்தும் வரலாற்றுப் படியாகக் கருதப்படுகிறது. தரமான மருத்துவ சேவைகளை மக்களுக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் எஸ். ஆர். எம் தொடர்ந்து முன்னணியில் திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *