மனசி – மனநிலை பாதிப்பிலிருந்து மீண்ட பெண்களை குடும்பத்துடன் சேர்க்கும் புதிய திட்டம்
சென்னை: சென்னையை அடுத்த சோமங்கலத்தில் இயங்கி வரும் ரெஹபோத் அறக்கட்டளை, காரிடாஸ் இந்தியா அறக்கட்டளை மற்றும் ரூப் வி.கே ஜெயின் என்னும் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இனைந்து மனசி என்னும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதன் மூலம், தங்களிடம் சிகிச்சை பெற்று வரும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் குணமடைந்த நிலையில் அவர்களை மீண்டும் குடும்பத்தாருடன் கொண்டு சேர்க்கும் திட்டமாகும். இதற்கு தேவையான நிதியை ரூப் வி.கே ஜெயின் என்னும் அறக்கட்டளையின் தாய் நிறுவனமான ஹைவே ரூப் பிரிசிஷியன் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் தனது சமூக பங்களிப்பு நிதியின் மூலம் வழங்கும்.
இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் ஹைவே ரூப் நிறுவனத்தின் தலைவர் மொஹித் ஆஸ்வால், தலைமை நிர்வாக அதிகாரி தர்மேஷ் அரோரா, தொழிலக தலைவர் விஜயேந்திரா, காரிட்டாஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஜேசுதாஸ் மற்றும் ரெஹபோத் அறக்கட்டளையின் இயக்குனர் சோரைடா சாமுவேல், தேசிய ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோருக்கான மேம்பாட்டு நிறுவன (NIEPMD) இயக்குனர் அமர்நாத் ஆகியோர் கலந்துகொண்டு மனசி திட்டத்தை துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து ரெஹபோத் அறக்கட்டளையின் இயக்குனர் சோரைடா சாமுவேல் கூறுகையில், மனநிலை பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றி திரிந்த பெண்கள் சுமார் 321 பேர் போலீசாரால் மீட்கப்பட்டு தங்களிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சைக்கு பிறகு அவர்களை அவரவர்களின் குடும்பாத்தாருடன் கொண்டு சேர்க்கும் திட்டமே மனசி என்று கூறினார்.
மேலும், அவ்வாறு சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்த பெண்களை அவர்களின் குடும்பத்தார் மீண்டும் அவர்களை சேர்த்துக்கொள்வதில்லை என்று கூறிய அவர், அப்படி சேர்த்து கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்களா, முழு மன நலத்துடன் உள்ளனரா, போன்ற கண்காணிப்பு பணிகளையும், அவர்களின் மறுவாழ்விற்கான தேவையான உறைவிடம், சுய தொழில் உள்ளிட்ட சேவைகளையம் காரிட்டாஸ் இந்தியா மேற்கொள்ள உள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை குடும்பத்தாருடன் சேர்க்கும் பணிகளையும் காரிட்டாஸ் இந்தியா மேற்கொள்ளும், அதற்கு தேவையான நிதியுதவியை ரூப் வி.கே ஜெயின் என்னும் அறக்கட்டளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.