சென்னையில் முதன் முறையாக பிரசாந்த் மருத்துவமனையில் அதிநவீன இந்திய தயாரிப்பு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை
சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் பிரஷாந்த் பல்நோக்கு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வெளிநாட்டு தயாரிப்பு ரோபோக்களே மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் முதன்முறையாக இந்திய நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன SSi Mantra 3 என்னும் ரோபோட் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிறுவனத்தின் ரோபோக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், சென்னையில் இதுவே முதன்முறை.
இதுகுறித்து பிரஷாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், பொதுமக்களுக்கு உலக தரத்திலான மருத்துவ சிகிச்சையை வழங்கும் பிரசாந்த் மருத்துவமனையின் நோக்கத்தில் இது ஒரு மைல்கல்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோவின் மூலம் எங்களது மருத்துவமனை நூறு சதவீதம் தொழில்நுட்பத்தில் இயங்கும் மருத்துவமனையாக தரம் உயர்ந்துள்ளது.
மற்ற ரோபோக்களை போல் இல்லாமல் சிறுநீரகம், மகப்பேறு, இரைப்பை – குடல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை ஆகியவற்றோடு சேர்த்து இதய அறுவை சிகிச்சையும் இந்த ரோபோ மூலம் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம். மேலும், டெலிசர்ஜெரி என்னும் தொழில்நுட்பத்தின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் மருத்துவர்கள் இந்த ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
அறுவை சிகிச்சைகளை துல்லியமாக செய்வதுடன், இது உள்நாட்டு தயாரிப்பு என்பதால் நடுத்தர மக்களும் எளிதாக அணுகும் வகையிலான மருத்துவ கட்டணத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும் காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவும் இந்த திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.