City Updates

சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழா 2026: இசைக்கச்சேரிகளால் களைகட்டிய சென்னையின் பாரம்பரிய விழா

சென்னையின் பாரம்பரிய கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழா, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் நடைபெறும் சிறப்பு கலாச்சார விழாவாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றுச் சிறப்பை தாங்கி நிற்கும் மயிலாப்பூர் பகுதியில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி இந்த விழா நடத்தப்படுகிறது.

விழா, பாரம்பரியமாக கபாலீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள நவராத்திரி மண்டபத்தில் காலை நேர இசைக்கச்சேரியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, கோவிலைச் சுற்றியுள்ள திறந்தவெளிகள், வீதிகள் மற்றும் பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கலாச்சார நிகழ்ச்சிகள் விரிவடைகின்றன.

சென்னையில் உள்ள பல்வேறு இசைப் பள்ளிகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் இசைக்கலைஞர்கள் இந்த கச்சேரிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். புதிய கலைஞர்களை அறிமுகம் செய்யும் முக்கிய மேடையாகவும் இந்த திருவிழா திகழ்கிறது.

பாரம்பரியத் தெருவிழாக்கள் மற்றும் செவ்வியல் இசை, வாத்திய நிகழ்ச்சிகளின் கலவையாக நடைபெறும் இந்த விழா, மயிலாப்பூரை சென்னையின் கலாச்சார மையமாக முன்னிறுத்துவதோடு, பாரம்பரியத்தை சமூக ரீதியாக ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் அமைகிறது.

22-வது சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழா – 2026 சிறப்பம்சங்கள்:

  • நாள் 1: திருமதி மீனாட்சி சீனிவாசன் அவர்களின் மாணவர்கள் இசைக்கச்சேரி
  • நாள் 2: சேலம் டாக்டர் காயத்ரி வெங்கடேசன் அவர்களின் மாணவர்கள் பங்கேற்ற கச்சேரி
  • நாள் 3: திருவையாறு பி. சேகர் அவர்களின் வழிகாட்டுதலில் ‘மஹதி அகாடமி’ மாணவர்களின் வாய்ப்பாட்டுக் கச்சேரி மற்றும் பிரபல மாண்டலின் கலைஞர் ஸ்ரீ U. ராஜேஷ் அவர்களின் மாணவர் மாஸ்டர் சமர்த் ஸ்ரீகுமார் அவர்களின் மாண்டலின் இசைக்கச்சேரி
  • இறுதி நாள்: ஸ்ருதிலயா இசைப்பள்ளியைச் சேர்ந்த ஆர். சுரேஷ் அவர்களின் மாணவர்கள் இணைந்து வழங்கிய பல்வேறு வாத்தியங்களின் ஒருங்கிணைந்த இசைக்கச்சேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *