இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்
சென்னை: சென்னை பெசன்ட்நகரில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தர முத்திரையின் மூலம் சான்றளிக்கப்பட்ட தரமான பொருட்களை நுகர்வோர் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய செஸ் கிரான்ட்மாஸ்டர் அர்ஜுன் கல்யாண் கலந்துகொண்டார். இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை அலுவலக இயக்குனர் பவானி, சிறப்பு விருந்தினர் அர்ஜுன் கல்யாண் ஆகியோர் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை அலுவலக இயக்குனர் பவானி கூறுகையில், தரம் என்பது பொருட்களில் மட்டுமில்லாமல் சேவையிலும் உள்ளது. இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது இந்திய நுகர்வோர் தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்த ஏதுவாக பல்வேறு அளவுகோல்களை வைத்து அவற்றிற்கு தர முத்திரைகளை வழங்குகிறது. சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை குறிக்கும் ஐ.எஸ்.ஐ (ISI) முத்திரை, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் தரத்தை குறிக்கும் ஹால்மார்க் (hallmark) முத்திரை, மின்சாதன பொருட்களின் தரத்தை குறிக்கும் சி.ஆர்.எஸ் (CRS) முத்திரை ஆகியவற்றை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்நிறுவனம் வழங்குகிறது. இந்த தர முத்திரைகளை கொண்ட தரமான பொருட்களை நுகர்வோர் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இந்த மாரத்தான் “தரத்திற்கான ஓட்டம்” என்னும் பெயரில் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.