எஸ்.ஆர்.எம்.–வோல்வோ குழுமம் இணைந்து மெய்நிகர் வாகன தொழில்நுட்ப சிறப்புத் திறன் மையம்
கட்டாங்குளத்தூர்: எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) மற்றும் வோல்வோ குழுமம் இந்தியா இணைந்து, கட்டாங்குளத்தூர் வளாகத்தில் மெய்நிகர் வாகன தொழில்நுட்பங்கள் (Virtual Vehicle Technologies) குறித்த சிறப்புத் திறன் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கல்வி மற்றும் தொழில்துறைக்கிடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில், வாகன மற்றும் மொபிலிட்டி துறையில் முக்கியத்துவம் பெற்ற மெய்நிகர் வாகன தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு நடைமுறை சார்ந்த பயிற்சி வழங்கப்படும். வோல்வோ குழும நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து பயிற்சி திட்டங்களை முன்னெடுப்பர்.
வோல்வோ குழுமம் இந்தியாவின் CSR இயக்குநர் ஜி.வி. ராவ், முதல் ஆண்டில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2,000க்கும் மேல் உயர்த்த இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், வோல்வோ குழுமம் இந்தியாவின் மூத்த அதிகாரிகள் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பதிவாளர், டீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
