சென்னையில் 17 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற 22வது ஆண்டு ரஷ்ய கலாச்சார விழா
நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்
சென்னை: சென்னையில் 17 ரஷ்ய நடனக் கலைஞர்கள் பங்கேற்ற 22வது ஆண்டு ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி இன்று மாலை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை டாக்டர் பத்மா சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். இதில் சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரக தூதர் வலேரி கோட்ஜேவ், துணைத் தூதர் லட்சுமி நாராயண், ஜெம் வீரமணி, இந்து என்.ராம், பிரம்மோஸ் ஏவுகணை தந்தை டாக்டர்..சிவதாணு பிள்ளை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர். சுந்தர வடிவேலு, ரஷ்ய கலாச்சாரம் மற்றும் அறிவியல் மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் டோடோனோவ் மற்றும் பி.தங்கப்பன் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
தங்கள் நாட்டின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ரஷ்ய கலைஞர்கள் ஆடிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததோடு அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இவர்களின் ஒவ்வொரு நடனமும் அதற்கேற்ற அங்க அசைவுகளும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
இதில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவரும் தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். ரஷ்யன் ஹவுஸ் மற்றும் ஏர் அரேபியா உடன் இணைந்து இந்தோ-ரஷ்ய கலாச்சார மற்றும் நட்புறவு அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழாவில் பாரம்பரிய நடனம் முதல் தற்போதைய நவீன காலத்திற்கேற்ற நடனம் வரை கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். இது ரஷ்யாவின் வளமான நடன பாரம்பரியத்தின் உள்ளார்ந்த நேர்த்தி, ஆர்வம் மற்றும் திறமையைஎடுத்துக்காட்டும் வகையில் புகழ்பெற்ற ரஷ்ய நடனக் கலைஞர்களை ஒன்றிணைத்து, சென்னையின் கலை ஆர்வலர்களுக்கு உற்சாக விருந்தாக அமைந்தது.
சென்னையை அடுத்து இந்த கலாச்சார நிகழ்ச்சி, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், ஈரோடு, திருச்செங்கோடு, திருச்சி மற்றும் சிவகாசி உள்ளிட்ட நகரங்களில் 18 கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட உள்ளது.
வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்ட சென்னையில், ரஷ்ய கலாச்சார விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
