விழுப்புரம் இளைஞர்களை நிச்சயம் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவோம்
விழுப்புரம் மாவட்டம் தடகள சங்கம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலிருமிருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, தமிழக தடகள சங்கத்தின் செயலாளர் லதா, விழுப்புரம் தடகள சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கார்த்திக் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
16, 18, 20 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் 5 மற்றும் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தமாக சுமார் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய விழுப்புரம் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கார்த்திக், இளைஞர்களிடையே தற்போது பரவலாக காணப்படும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இப்போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், விளையாட்டின் மூலம் இளைஞர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தவிர்க்கலாம் என்றும், விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டில் பலர் சிறந்து விளங்குகின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.